மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம், மேற்கு தெருவை சேர்ந்த காளிமுத்து என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார். அதில், "1964ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் சென்னை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வலம்புரி கிராமத்தில் 5 ஏக்கர் தென்னை ஆலாட்டி நிலம் எனது தந்தைக்கு வழங்கப்பட்டது. இதே திட்டத்தின் கீழ் மாரிமுத்து, விஜயராணி என்பவர்களுக்கும் எனது நிலத்தின் அருகே நிலம் வழங்கப்பட்டது.
விஜயராணி சில நபர்களுடன் இணைந்து போலி ஆவணங்கள் தயார் செய்து எனது இடத்தை அபகரிக்க முயல்கின்றனர். விஜயராணிக்கு ஆதரவாக உச்சிப்புள்ளி காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆடிவேல், காவல் உதவி ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் தலைமை காவலர் இணைந்து என்னை மிரட்டி வருகின்றனர்.இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தேன்.
இந்த நிலையில் ஜூன் 14ஆம் தேதி காவல் ஆய்வாளர் ஆடிவேல், சார்பு ஆய்வாளர் முருகானந்தம், தாமரைகுளம் பஞ்சாயத்து கிராம நிர்வாக அலுவலர் சூர்யா மற்றும் 25 காவல்துறையினர் இணைந்து எங்களை தாக்கி, ஜேசிபி இயந்திரத்துடன் எனது நிலத்தில் இருந்த 4 குடிசைவீடுகளை இடித்தனர். இதிலிருந்த 20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அருகில் உள்ள பகுதியில் புதைத்தனர். என்னை சட்டவிரோதமாக கைது செய்து இரவு வரை காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். இது குறித்து அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, வழக்கறிஞர் ஆணையம் அமைத்து சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, எங்களை தாக்கி சட்டவிரோதமாக வீடுகளை இடித்தது தொடர்பாக விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை இன்று (ஜூலை 1) விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கில் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளரை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் சேர்க்கிறது என்றார். மேலும் வழக்கு குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: திருடுபோன தமிழின் முதல் பைபிள் - லண்டனில் கண்டுபிடிப்பு