மதுரை வடக்குத் தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவரே கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும். அதிமுகவில் யாரிடம் அதிகாரம் உள்ளது எனத் தெரியவில்லை. ஆளுமைமிக்க தலைவரை அதிமுக உருவாக்க வேண்டும் என பல்வேறு கருத்துகளை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஓ.பி.ரவீந்திரநாத் குமாருடன் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஒன்பது எம்எல்ஏக்கள் ஜெயலலிதா சமாதிக்கு செல்லாதது ஏன் எனவும், அவர்களை தடுத்தது யார் எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், மக்களவைத் தேர்தலில் அதிமுக முக்கிய தொகுதிகளில் தோல்லியடைந்துள்ளது. அதுகுறித்து ஆலோசிப்பதற்கு பொதுக்குழுவைக் கூட்டாதது வருத்தமளிக்கிறது என்றார். அதேபோல் எந்த பூசல் இருந்தாலும் எம்எல்ஏ.க்கள் யாரும் அதிமுகவை விட்டு வெளியேற மாட்டோம் என்றார்.