மதுரை விமான நிலையம் அருகேயுள்ள மண்டேலா நகரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "இந்த தேர்தல் இரண்டு கருத்தியல்களுக்கிடையே நடைபெறும் போராட்டம் ஆகும். ஒன்று மக்கள்தான் நாட்டை ஆள வேண்டும் என்கிறது. மற்றொன்று தனி மனிதர்தான் நாட்டை ஆள வேண்டும் என்கிறது. பல்வேறு மொழிகள், இனங்கள், கலாச்சாரம் மிக்க இந்தியாவில் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் ஆர்எஸ்எஸ்சும் பாஜகவும் ஒரே மொழி ஒரே மதம் என்று செயல்படுகின்றன.
அவர்களைப் பொறுத்தவரை தமிழகத்தின் தலைவர்களான காமராஜர், பெரியார், கருணாநிதி போன்ற சிந்தனையாளர்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. தமிழர்கள் அன்பானவர்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உடையவர்கள். சுயமரியாதை கொண்டவர்கள். அதேபோன்று பல மதங்களையும், பெண்களையும் மதிப்பவர்கள். தமிழர்களின் கலாச்சாரம் மோடிக்குத் தெரியாது.
தமிழ் நாட்டின் பிரச்னைகளை தனது ஆளுமைக்குள் வைத்திருப்பதன் மூலம், தமிழர்களை தன் ஆளுமைக்குள் வைத்துக் கொள்ளலாம் என மோடி நினைக்கிறார். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக ஆட்சியில் குறுக்கிடப் போவதில்லை. இந்தியாவில் வாழும் ஏழைகளின் அடிப்படை வருமானத்தை உறுதி செய்யும் வகையில் நாங்கள் உருவாக்கியுள்ள திட்டம்தான் ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரத்தை வழங்குவது. அதன் மூலம் ஆண்டுதோறும் 72 ஆயிரம் ரூபாய் அவர்களுக்குக் கிடைக்கும். 5 ஆண்டுகளுக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய். 5 கோடி குடும்பங்களுக்கான இந்தத் தொகை அதன் குடும்பத் தலைவிகளிடம் நிச்சயம் ஒப்படைக்கப்படும்.
திருப்பூர் மற்றும் பட்டுத் தலைநகரமான காஞ்சிபுரம் ஜி.எஸ்.டி. வரிக் கொடுமையால் பின் தங்கிவிட்டது. நாடெங்கும் சிறு குறு தொழில்கள் நசுங்கி விட்டன. நாங்கள் ஒரே ஒரு வரி, எளிமையான வரி, குறைந்த வரியை விதிப்போம். சிறு குறு தொழில்கள் லாபகரமாக நடக்க வழி வகுப்போம். தற்போதைய அரசு ஜி.எஸ்.டி. மூலம் 28 சதவீதத்தை வரியாக கொள்ளை அடிக்கிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். ஏற்கெனவே இந்தியாவில் காலியாக உள்ள 28 லட்சம் பணியிடங்களை நிரப்புவோம். தமிழக இளைஞர்கள் தொழில் தொடங்க எளிய வழிமுறைகளை உருவாக்கி, 3 ஆண்டுகளுக்கு எந்த நடைமுறையையும் பின்பற்ற வேண்டியது இல்லை என்ற நிலையை உருவாக்குவோம். இதன் மூலம் தொழில் பெருகும். பெண்களின் குரல், சட்டமன்றத்தில் நாடாளுமன்றத்தில் ஒலிக்க, வேலை வாய்ப்புகளிலும் கணிசமான இடம் பெற பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு ஏற்படுத்துவோம்" என தெரிவித்தார்.
திருச்சி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், விருதுநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சீனிவாசன், மானாமதுரை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் இலக்கிய தாசன் ஆகியோருக்கு வாக்களிக்குமாறு ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார்.