மதுரை: புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண பொங்கலன்று ராகுல் காந்தி மதுரை வருகிறார். அதேபோல் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் ஆகியோரும் பொங்கல் விழாவை கொண்டாடவுள்ளனர்.
வேல் யாத்திரை - பொங்கல் விழா:
பாஜக சமீப காலமாக தமிழ்நாட்டு மக்களிடம் நற்பெயரைப் பெற மெனக்கெட்டு வருகிறது.வேல் யாத்திரையை கையிலெடுத்து, தமிழ் கடவுளாம் முருகனுக்கு மாநிலம் முழுவதும் விழா நடத்தியது. தற்போது ‘நம்ம ஊர் பொங்கல்’ என தமிழர் திருநாளாம் பொங்கலை சிறப்பாக கொண்டாடி வருகிறது.
ஜே.பி. நட்டா பொங்கல் விழாவில் கலந்துகொள்ள மதுரை வருவது இதுவே முதல்முறையாகும். ராகுல் காந்தியும் முதன்முறையாக தற்போதுதான் ஜல்லிக்கட்டு விழாவைக் காண ஆவலுடன் மதுரை வருகிறார். சென்னையில் இருக்கும் மோகன் பகவத்தும் பொங்கல் விழாவை சிறப்பிக்க திட்டமிட்டுள்ளார். இதற்கு முன்பு எல்லாம் இவர்கள் தமிழர் பண்டிகைகளுக்கும் விழாக்களுக்கும் இத்தனை முக்கியத்துவம் கொடுத்தார்களா? என்றால் இல்லை.
தேசியக் கட்சிகளுக்கு தமிழ்நாட்டு மக்களிடம் பெரிதாக செல்வாக்கு இல்லாத காரணத்தால், தனி செல்வாக்கை நிலைநாட்ட இவர்கள் போராடி வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜே.பி. நட்டா பொங்கல் விழாவை முடித்துவிட்டு ‘துக்ளக்’ பத்திரிகையின் விழாவில் கலந்துகொள்கிறார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை 2 மணி நேரம் கண்டுகளித்த பின்பு, ராகுல் மீண்டும் டெல்லி செல்கிறார்.