ஈரோடு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அதன் ஒரு பகுதியாக மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கதிரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நஞ்சனாபுரம் கிராமத்தில் மக்களவைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 2கோடியாவது பயனாளர்க்கு மருத்துவ பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 2 கோடியாவது பயனாளர் சுந்தரம்பாள் என்பவருக்கு மருத்துவ பெட்டகம் வழங்கி உடல் நலம் விசாரித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், "மக்களவைத் தேடி மருத்துவம் 2021-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தை தொடங்கிய வைத்த முதலமைச்சர், ஒரு கோடி பேரை 'மக்களவைத் தேடி மருத்துவம்' சென்றடைய வேண்டும் என்று கூறினார்கள்.
இந்த திட்டத்தில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், பிசியோதெரபி போன்ற நோய் உள்ளவர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று மருத்துவம் பார்ப்பதுதான் இதன் நோக்கம். திருச்சியில் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கினார்.
இதனை தொடர்ந்து இந்த திட்டம் ஒட்டுமொத்த மக்களை சென்றடைந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நஞ்சனாபுரத்தில் உயர் ரத்த அழுத்தம் பாதிக்கப்பட்ட சுந்தரம்பாள் என்பவருக்கு இரண்டு கோடியாவது மக்களவைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்கினார்.
இந்த திட்டத்தின் கீழ் முதல் முறைய பயனாளர்கள் இரண்டு கோடியும், தொடர் பயனாளர்கள் என தமிழகத்தில் 5 கோடிக்கு மேல் மக்களவைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயன்பெற்று உள்ளார்கள். இந்த திட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் கடந்த செப்டம்பர் 25ம் தேதி நியூயார்கில் உள்ள ஐநா பொதுசபை கூடி மக்களவைத் தேடி மருத்துவத்திற்கு 2024ம் ஆண்டுக்கான ஐநா விருது வழங்கியுள்ளது," என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ஒரே நேரத்தில் 555 பேருக்கு வர்ம சிகிச்சை" கின்னஸ் சாதனை படைத்த தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை!
தொடர்ந்து பேசிய அவர், "விருது பெற்ற போது ஒரு கோடியே 97 லட்சம் பயனாளர்கள் எண்ணிக்கை இருந்த நிலையில் இன்று 2கோடியை எட்டியுள்ளது. இதில் உயர் ரத்த அழுத்தம் நோய் 1கோடிக்கு மேல், நீரிழிவு நோய் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை 49லட்சம் மேலும் மற்றும் இரண்டு வகை நோயால் பாதிக்கப்பட்ட 44 லட்சத்திற்கு மேல் என்றார்.
குறிப்பாக இத்திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 7 லட்சத்துக்கு மேலானவர்கள் பயன்பெற்று உள்ளார்கள். அம்மா கிளினிக் திட்டம் மாநில அரசின் நிதி இல்லாமல் என்.ஹெச்.எம் நிதியுதவிடன் ஒரு வருடத்திற்கு என்ற ஒப்புதலோடு இருந்தது. அதுவும் ஒரு வருடத்திற்கு பின்னர் காலாவதியாகி விட்டது. அதனால் இந்த அரசு வந்த பிறகு மூடியது போல எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்," என்று கூறினார்.