Punjab Protest: மதுரை வந்துள்ள சி.டி. ரவி மதுரை மேலமாசி வீதியில் உள்ள காந்தி அரை ஆடைக்கு மாறிய காதிகிராஃப்ட் அலுவலகத்தைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "மதுரை தமிழ்நாட்டினுடைய பண்பாட்டுத் தலைநகர், வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரியமான நகர், அன்னை மீனாட்சி நகருக்கு வந்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்.
காந்தியடிகள் தன்னுடைய இரண்டாவது வருகையின்போது 1921 செப்டம்பர் 21இல் ஆடை மாற்றம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்த இடம் இது. இந்த இடத்திற்கு ஆடை மாற்றம் நூற்றாண்டு விழா நடைபெறுகின்றபோது வந்ததை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன்.
பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தியடிகள் முனிவராக மாறிய இடம். காந்தியின் எளிய வாழ்க்கையைப் பின்பற்றி அவருடைய சிந்தனைகளைப் பின்பற்றி நெல்சன் மண்டேலா, பராக் ஒபாமா போன்றோர் தங்களது நாடுகளில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களைக் கொண்டுவந்தனர்.
மோடி நீண்ட ஆயுள் வாழ பிரார்த்தனை
நேற்று பஞ்சாபில் நடந்தது மிகவும் கண்டனத்துக்குரியது. தேசிய பாதுகாப்பு அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும்? பாகிஸ்தான் எல்லையிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் இது நடந்திருக்கிறது.
நம்முடைய நாட்டின் பிரதமரை 20 நிமிடங்கள் காக்கவைத்திருக்கிறார்கள். பிரதமருடைய பாதுகாப்பு குறைபாட்டிற்கு அந்த மாநில அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். ஒரு மாநிலத்திற்கு பிரதமர் வரும்போது பிரதமருடைய பயண நிகழ்ச்சி நிரல் அதனுடைய பயணப் பாதையை வகுப்பது அந்தந்த மாநில அரசுகள்தாம், அந்த வகையில் பஞ்சாபிலுள்ள மாநில அரசுதான் இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும்.
இந்த நிகழ்வின் மூலம் காங்கிரசின் உள்ளார்ந்த எண்ணம் வெளிப்பட்டிருக்கிறது. பிரதமருக்கும் பிரதமருடன் நிற்கும் அவருடைய உயிர் பாதுகாவலர்களின் நீண்ட ஆயுளுக்கும் மிருதுஞ்சய ஹோமங்கள் செய்துவருகிறோம்" என்றார்.
வெல்கம் மோடி
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்திற்கு மத்திய அரசால் வழங்கப்படும் வைப்புநிதி குறித்த கேள்விக்கு, "மத்திய அரசிடம் நிதி கோரினால் வழங்கப்படும். தேர்தலின்போது மதுரைக்கு வந்த பிரதமர் உங்களின் நண்பன் என்று கூறினார். அதனை நிரூபிக்கும் வகையில் தற்போது 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாட்டிற்குத் தருகிறார்.
எந்த அரசும் இதுவரை ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை ஒரு மாநிலத்திற்குத் தந்ததில்லை. அவர் இப்போது மட்டுமல்ல எப்போதும் தமிழ்நாட்டினுடைய நண்பன்தான். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் எப்போதும் துணை நிற்பார். பிரதமருடைய வருகையின்போது தமிழ்நாட்டு மக்களின் தாரக மந்திரமாக இருக்க வேண்டியது 'வெல்கம் மோடி' என்பதுதான்" என்றார்.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்ட விவகாரம்: சீமான் சொன்னார்... ஸ்டாலின் செய்கிறார்!