மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கடந்த 2 நாள்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. நாளொன்றுக்கு 500 மருந்துகள் மட்டுமே பொது விற்பனைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இருப்பு இல்லை எனக் கூறி விற்பனை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று (மே 10) மீண்டும் விற்பனை தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் உறவினர்களை காப்பாற்ற அதிகாலையிலிருந்தே வரிசையில் நின்றனர்.
மருந்து வாங்க மதுரை மருத்துவ கல்லூரிக்கு வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் கூறுகையில், ”என்னுடைய மகன் தேனி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 நாள்களாக ஆக்சிஜன் மூலமே அவருக்கு சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை மிக மோசமாக உள்ளது. ஆகையால் அவருக்கு இந்த மருந்து கொடுத்தால் ஓரளவிற்கு சரியாகும் என மருத்துவர்கள் கூறினர்
நேற்றிலிருந்து அந்த மருந்தை பெறுவதற்காக இங்கு காத்திருக்கிறேன். ரெம்டெசிவிர் மருந்து கிடைத்தால் மட்டுமே என் மகனை காப்பாற்ற முடியும்” என்றார்.
திருப்பூரைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் கூறுகையில், எனது உறவினருக்காக இந்த உயிர் காக்கும் மருந்தை வாங்குவதற்காக வந்துள்ளேன். இருப்பு இல்லை என்கிற காரணத்தால் நேற்று மருந்து வாங்க முடியவில்லை. ஆகையால் இன்று காத்திருந்து அதை வாங்கிச் செல்ல வரிசையில் நிற்கிறேன் என்றார்.