மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி பகுதியில் ஆதிதிராவிடர்களுக்கு என அரசு இடம் ஒதுக்கியுள்ளது. அந்த இடத்தில் வீட்டுமனை பட்டாவும் அப்பகுதியினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்தப் பகுதியிலுள்ள தெருவுக்கான பொதுப்பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து, தன்னுடையது என கூறி வருகிறாராம். இதனால் அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேரில் வந்து தாசில்தார் பழனிக்குமாரை சந்தித்து 'தெருவை காணோம்' என விசித்திரமாக மனு அளித்துச் சென்றனர்.
அந்த மனுவில், பொதுப்பாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் அளித்திருப்பதுடன், காணாமல் போன தெருவை மீட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்த் திரைப்படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் வடிவேலு இதே போன்று தனக்கு சொந்தமான கிணற்றை காணவில்லை என்று காவல் நிலையித்தில் புகார் அளிப்பதுடன், காவலரையும் நேரில் அழைத்துச் சென்று கிணறு இருந்த இடம் என்று ஒரு இடத்தைக் காட்டுவார். இந்தக் காமெடி பட்டித்தொட்டியெங்கும் பரவலாக ரசிக்கப்பட்டதுடன், இதை மையமாக வைத்து வாட்ஸ் அப் பதிவுகளும், மீம்களும் ஏராளமாக உலா வந்துள்ளன.
அந்த வகையில், சாணாம்பட்டி மக்களின் இந்த விநோத நடவடிக்கையால் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சுற்றுச் சூழலை பாதிக்கும் கல்குவாரியை மூடக் கோரி மனு!