மதுரையில் பரவி வரும் கரோனா பெருந்தொற்றைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் தலைமையில் இன்று (மே.22) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பின் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது செய்தியாளர்கள் ஹெச்.ராஜா விமர்சித்தது குறித்து கேள்வியெழுப்பினர். அதற்கு பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ”என்னைப் போன்றே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
எனது தந்தையார் பி.டி.ஆர் பழனிவேல் ராஜனோடு பல தேர்தல்களில் வாக்களிக்கச் சென்றுள்ளேன். அதுமட்டுமன்றி மதுரை மத்தியத் தொகுதியில் தொடர்ந்து கடந்த ஆட்சி வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளேன். அப்போதெல்லாம் என் குடியுரிமைமீது சந்தேகம் கொள்ளாதவர்களுக்கு இப்போது மட்டும் திடீரென்று வருவது ஏன்? எனவே ஹெச்.ராஜா போன்ற பண்பில்லாத நபர்களின் விமர்சனத்தை எல்லாம் செய்தியாளர்கள் கேள்வியாகக் கேட்பதைத் தவிர்க்கவும்.
தற்போது பதவியேற்றுள்ள எங்களுக்கு நிறைய வேலைகள் உள்ளன. கரோனா தடுப்புப் பணிகளில் தீவிரமாக இறங்கி பணிசெய்து வருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க: 'ஜக்கி வாசுதேவ் குறித்து இனி நோ கமெண்ட்ஸ்...’ பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!