மதுரை: மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி நடைபெற்றுவரும் ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகள் குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “மதுரையில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஜனநாயக மரபிற்கு மாறாக நடைபெற்றுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக தனித்தலைவரும் இல்லை, மக்கள் பிரதிநிதிகளும் இல்லை, ஆய்வுக்குழு கூட்டமும் கூட்டப்படவில்லை.
தனிபட்ட நபரின் நன்மைக்கு செயல்படும் திட்டம்
மூன்று முன்னாள் அமைச்சர்களின் ஊழலுக்காகவே பொதுமக்களின் கருத்தை கேட்காமல் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்றுள்ளன. இத்திட்டத்தில் அனைத்து கட்டடங்களும், சாலைகளும் தரமற்று உள்ளன.
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டமானது மக்களின் பணத்தை வீணாக பயன்படுத்தி செயல்படுத்தபட்டுள்ளது. வருமானம் வரக்கூடிய திட்டங்களை கடன் வாங்கி நிறைவேற்றியிருக்கலாம்.
மக்கள் பணம், உள்கட்டமைப்பு பணம், கடன் போன்ற முறைகளில் திட்டங்களை செயல்படுத்த முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடங்கியுள்ளதில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து நிதி தணிக்கை, சிஏஜி தணிக்கையும் செய்ய வேண்டும்.
யாரோ சம்பாதிக்க இத் திட்டம்
இதில் தனிநபர் குற்றச்சாட்டு மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி வேறுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி செயல்படுத்திய திட்டம் மக்களுக்கு கேடுதான். யாரோ சம்பாதிப்பதற்காக இது நடைபெற்றுள்ளது. மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எல்இடி ஊழல் நடைபெற்றுள்ளது. இதில் அலுவலர்கள் மீதான முறைகேடு குறித்து ஆதாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டமிடவில்லை. வருமானத்தை போன்று, போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்த வேண்டும். கோயிலை சுற்றியுள்ள பகுதியில் வாகனங்களை இயக்குவதற்கும், வாகனங்களை நிறுத்த தடை செய்ய வேண்டும்” என்றார்.