மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகேயுள்ள காந்தி கிராமத்தில், தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக்கோரி ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆதித்தமிழர் பேரவை மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் ஆதித்தமிழர் பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கையால் மலம் அள்ளத் தடை மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2013ஐ உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும்; விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 தொழிலாளர்களின் இறப்பிற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும்; டிஜிட்டல் இந்தியா என்ற முழக்கத்தை முன்னிறுத்தும் மோடி அரசு மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவல நிலையை இன்று வரை மாற்ற முயற்சிக்காமல், தூய்மை இந்தியா என்ற செயல்பாட்டை முன்னிறுத்தி அடித்தட்டு மக்களை ஏமாற்றி வருவதாகவும் முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும் மருத்துவர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பேரிடர் காலங்களில் பணியாற்றும் போது, சிறப்பு ஊதியமாக இரண்டு மாத சம்பளத்தை வழங்குவதாக அறிவித்த மத்திய, மாநில அரசுகள் இன்று வரை அதனை வழங்காதது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பினர்.