மதுரை:திருச்சியைச் சேர்ந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
"கர்நாடக அரசு காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்டுவதற்கு ஏற்பாடு செய்துவருகிறது. அவ்வாறு செய்தால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு மிகப்பெரிய இழப்பும், பாதிப்பும் ஏற்படும். கர்நாடக அரசின் செயல் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும், காவேரி மேலாண்மை ஒழுங்காற்றுக்குழு உத்தரவுக்கும் எதிரானதாகும்.
எனவே, எங்கள் சங்கத்தின் சார்பாக ஆகஸ்ட் மாதம் டெல்லி சென்று காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்டுவதை எதிர்த்து போராட்டம் நடத்த திட்டமிட்டோம்.
300 விவசாயிகள் டெல்லி செல்ல திட்டம்
இதற்காக விவசாயச் சங்கத்தின் உறுப்பினர்கள் 300க்கும் மேற்பட்டோர் ரயில் மூலம் டெல்லி செல்ல எங்களது சங்கத்தில் முன்பு கூடியிருந்த போது காவல்துறையினர் எங்களைக் கைது செய்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனு அளித்தோம் டெல்லி செல்ல அனுமதி வழங்கவில்லை.
தற்போது 2022 பிப்ரவரி 14ஆம் தேதி விவசாய பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை தர வேண்டும் எனவும், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து டெல்லி சென்று போராடத் திட்டமிட்டுள்ளோம். இதனைக் காவல்துறையினர் அலுவலர்கள் தடுக்காமல் டெல்லி செல்வதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பாக நேற்று(பிப்.11) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, "மனுதாரர் வெளியிடங்களுக்குச் செல்வதைத் திருச்சி மாநகர காவல் ஆணையர் தடுக்கக் கூடாது. ஆனால் மனுதாரர் சட்டவிரோதமாகவோ, பிரச்சனைகளை ஏற்படுத்தும் விதமாகவோ செயல்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கலாம்" என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்தவர்கள் கைது - தனிப்படை காவல் துறை நடவடிக்கை