புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தனபதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டையில் 1974ஆம் ஆண்டு வரை 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக, பசுமை காடுகளாக இருந்தன. இவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நீராதாரமாக விளங்கியதோடு, விவசாயத்திற்கும் உறுதுணையாக இருந்தது. ஆனால், 1974ஆம் ஆண்டுக்குப் பிறகு வணிக நோக்கில் யூக்கலிப்டஸ், முந்திரி போன்ற மரங்கள் தமிழ்நாடு வனத்தோட்ட கழகத்தால் நடப்பட்டன.
இந்த மரங்களை வளர்ப்பதற்காக மரங்களின் நாற்புறங்களில் அகழிகளையும், பெரிய மண் தடுப்புகளையும் அமைத்து வருகின்றனர். இதனால் மழை நீர் அதனுடைய ஓட்டத்தில் செல்லாமல் தடுக்கப்படுகிறது. தண்ணீர் முழுவதும் யூக்கலிப்டஸ் மரத்தால் உறிஞ்சப்படுகிறது. இதனால், விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளதோடு, பாரம்பரிய நீர் மேலாண்மை அமைப்பு சிதையும் நிலையில் உள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தபோது பொதுப்பணித்துறை மற்றும் நீர் மேலாண்மை துறையின் அறிவுறுத்தல்களை பெறும் வரை, யூக்கலிப்டஸ் மரங்களை நட வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார். இருப்பினும், வனத் தோட்டக் கழக நிர்வாகம் அதனை கருத்தில் கொள்ளாமல், தொடர்ந்து யூக்கலிப்டஸ் மரங்களை நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே, புதுக்கோட்டை வனப்பகுதியில் யூக்கலிப்டஸ் மரங்களை நட இடைக்காலத் தடை விதிப்பதோடு, நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நீக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் சிவஞானம் மற்றும் தாரணி அமர்வு, புதுக்கோட்டையின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் யூகலிப்டஸ் மரங்களை நட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை அக்டோபர் இரண்டாம் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.