கரோனாவால் நாடு முழுவதும் பொதுமக்கள் பிரச்னையில் உள்ள நிலையில், குற்றவியல் சட்டத் திருத்தத்தில் மத்திய அரசு அவசரம் காட்டுவது ஏன் என்று மக்கள் சிவில் உரிமைக் கழக (பியூசிஎல்) தேசியச் செயலாளர் பேராசிரியர் முரளி கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அவர் வழங்கிய சிறப்புப் பேட்டியில், "மத்திய அரசின் அடுத்த தாக்குதல் குற்றவியல் சட்டங்களை திருத்துதல் என்பதே. உண்மைதான். திருத்தப்பட வேண்டியவை தான் இச்சட்டங்கள். ஆனால், அவசர கதியில், அதுவும் கரோனா காலத்தில் மிகவும் குறைந்த கால அவகாசத்தில், அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இணையதளம் மூலமாக தற்போது கொண்டு வரப்படவுள்ள சட்டத்திருத்தங்கள் குறித்த கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. வழக்கம் போல, சில வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத் திருத்தத்திற்கு அவசரம் ஏன்? சட்ட கமிஷன் இதில் ஈடுபடுத்தப்படவில்லை. ஏற்கெனவே மாலிமத் குழு 2003ஆம் ஆண்டில் பல திருத்தங்களை முன்வைத்தபோது கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. தற்போது எல்லோரும் உயிர் பயத்திலும், உணவுப் பற்றாக்குறையிலும் இருக்கும் போது அரசு வேகவேகமாக சட்டத்திருத்தங்களை முன்வைத்துள்ளது. இத்திருத்தங்கள் எப்படிப்பட்டவை என்பதைப் படித்து, அதன் மீது நாடு முழுவதும் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டு, பின்னர் அதில் திருத்தங்கள் செய்து படிப்படியாகக் கொண்டுவருவதே நியாயம். பல பத்தாண்டுகளாக நடப்பில் உள்ள சட்டங்களை மாற்றும் போது, அதுவும் காவல் துறைக்கு மேலும் அதிக அதிகாரங்களை வழங்கக்கூடிய ஆபத்து உள்ள நிலையில், சிவில் சமூகத்தினர் இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
சில நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். நான்கு தலைப்புகளில் இந்த முன்வைப்பு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் 15 நாட்கள் மட்டுமே கருத்துக் கூற அனுமதித்து, அதுவும் 200 வார்த்தைகளில் மட்டுமே தெரிவிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.