மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. திருவிழாவின் ஒவ்வொரு நாளிலும் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரும் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவிழாவின் எட்டாம் நாளான ஏப்ரல் 30-ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு மதுரை அரசியாக பட்டம் சூட்டப்பட்டது. ஒன்பதாம் நாள் திருவிழாவான மே 1-ஆம் தேதி திக் விஜயம் நடைபெற்றது. பத்தாம் நாளான இன்று (மே 2) திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாணத்திற்காக மேற்கு வடக்கு ஆடி வீதியில் 12 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் தகர கொட்டகை அமைக்கப்பட்டு பிரமாண்ட மணமேடை அமைக்கப்பட்டிருந்தது.
மணமேடையை அலங்கரிப்பதற்கான பூக்களைக் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஈடுபட்டனர். பலரின் உழைப்பில் மதுரை மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி உள்ளிட்ட உள்ளூர் ரகப் பூக்களும், பெங்களூரு ரோஸ், வெளிநாட்டிலிருந்து தாய்லாந்து ஆர்க்கிட் மற்றும் பல வண்ண மலர்கள் கொண்டு சுமார் 10 டன் மலர்களால் திருக்கல்யாண மேடை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் கோயில் வளாகம் முழுவதும் வாழை மரத் தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன.
திருக்கல்யாணத்தில் பங்கேற்பத்ற்காக திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் நேற்று மாலையில் திருப்பரங்குன்றத்திலிருந்து புறப்பாடாகி இன்று அதிகாலை 6 மணியளவில் கோயிலை வந்தடைந்தனர். முன்னதாக இன்று காலை 4 மணி அளவில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் சித்திரை வீதியில் வலம் வந்தனர்.
மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக கட்டண தரிசணத்தில் 6 பக்தர்களும், கட்டணமில்லா தரிசணத்தில் 6 ஆயிரம் பக்தர்களும் மனமேடை அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் திருக்கல்யாண மேடையில் திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகன் பெருமான் தெய்வானையுடனும், பவளக்கனிவாய் பெருமாளும் எழுந்தருளியதை தொடர்ந்து அருள்மிகு மீனாட்சியும் சொக்கநாதரும் மணமக்களுக்குரிய அலங்காரத்தில் திருக்கல்யாண மேடையில் எழுந்தருளினர்.
தொடர்ந்து வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்கிட திருமண சடங்குகள் நடத்தப்பட்டு மீனாட்சி அம்மன் மற்றும் சுவாமிக்கு பட்டுவஸ்திரம் சாத்தப்பட்டது. காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுந்தரேசுவரரிடம் இருந்து பெற்ற மங்கலநாணை சிவாச்சாரியார் மீனாட்சி அம்மனுக்கு அணிவிக்க திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
இதனையடுத்து திருக்கல்யாணத்தில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களும் புதுத்தாலி கயிறு மாற்றிக் கொண்டனர். இந்த திருக்கல்யாணத்தை காண்பதற்கு மதுரை மட்டுமல்லாது, வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வந்திருந்தனர். அவர்களும் திருக்கல்யாணத்தை காண்பதற்கு ஏதுவாக கோயில் வளாகத்தில் பிரம்மாண்ட எல்.இ.டி.திரை அமைக்கப்பட்டிருந்தது. இவ்விழாவுக்கு வந்திருந்த பக்தர்களுக்காக மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் கல்யாண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து 11-ம் நாள் (மே 3) நாளை பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் தனித்தனித் தேரில் எழுந்தருள தேரோட்டங்கள் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து இழுக்க மாசி வீதி எங்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர். மே 5-ஆம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த சித்திரைத் திருவிழா பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.