மதுரை: தமிழ்நாடு முழுவதும் 886 டயக்னாஸ்டிக் மற்றும் ஸ்கேன் மையங்கள் உள்ளன. இதில் அதிகபட்சமாக சென்னையில் 431 மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் மதுரையில் 27 மையங்கள் இயங்குகின்றன.
இந்த மையங்கள் அனைத்திலும் தற்போதைய கரோனா பேரிடர் காலங்களில் மேற்கொள்ளக்கூடிய ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் ஆகியவற்றுக்காக தனித்தனியே கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன.
சிஆர்பி (CRP), ஹீமோகுளோபின் பரிசோதனைக்கான CBC, அதனோடு தொடர்புடைய மற்றொரு D-DIMER ஆகியப் பரிசோதனைகளுக்கு ஆயிரத்து 400 ரூபாயும், Covid 19 Antibody GT பரிசோதனைக்கு 650 ரூபாயும், ஆர்டிபிசிஆர் (RT-PCR) பரிசோதனைக்கு 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கரோனா தொற்று சிகிச்சைக்குப் பின்னரான பரிசோதனைகள் ரூ.1400 முதல் ரூ.4000 வரை பரிசோதனையின் தன்மையைப் பொறுத்து மாறுபடுகின்றன.
இப்பரிசோதனைகளின் தன்மையை அடிப்படை, விரிவானது, பிரீமியம் என மூன்று விதமாகப் பிரித்து அதற்கு ஏற்றார்போல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.
தனியார் மருத்துவமனையில் கூடுதல் கட்டணம் நிர்ணயம்:
மேலும் சிடி ஸ்கேனை பொறுத்தவரை, குறைந்தபட்சம் 2ஆயிரம் ரூபாயில் தொடங்கி 6ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
சில கூடுதல் சோதனைகளின் பொருட்டு மேற்கண்ட கட்டணத்தில் கூடுதலாக ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. அதேபோன்று வீட்டிற்கே சென்று ரத்தம், சிறுநீர், சளி, கரோனா உள்ளிட்டப் பரிசோதனைகள் மேற்கொள்ளுவதற்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மதுரையைப் பொறுத்தவரை பல்வேறு மருத்துவ தனியார் பரிசோதனை மையங்களில், கரோனா தொடர்பாக அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைவிட கூடுதல் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்படுவதாகவும், வாடிக்கையாளருக்கு வழங்கக்கூடிய ரசீதில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே அச்சடித்து வழங்குகிறார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர்களின் ஆதங்கம்:
இதுகுறித்து டிராஃபிக் ராமசாமி அமைப்பில் பணியாற்றும் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நாகேஸ்வரன் கூறுகையில், 'சாதாரண சளி என்று மருத்துவமனைக்குச் சென்றால், உடனடியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
பரிசோதனை மையங்களில் இதுபோன்ற டெஸ்ட்டுகளுக்கு 700 ரூபாயிலிருந்து, 2 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்கிறார்கள்.
மேலும், ஸ்கேன் எடுப்பதற்கு 3ஆயிரத்திற்கு 500 ரூபாயிலிருந்து 7ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது. உணவுக்கே வழி இல்லாத இந்த காலகட்டத்தில், இது போன்ற கட்டணக் கொள்ளைகள் வேதனை தருகின்றன.
அரசு நிர்ணயித்த தொகைக்கு மட்டுமே ரசீது வழங்கிவிட்டு கட்டணங்களை அதிகமாகப் பெறுவது தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு குழு அமைத்து நேரடியாக கண்காணிக்க வேண்டும்' என்கிறார்.
மதுரையிலுள்ள சில ஸ்கேன் சென்டர்கள் பொதுமக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு, அரசு நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையில் இயங்கினாலும், பெரும்பாலான மையங்கள் லாப நோக்கத்தோடு இதுபோன்று அளவுக்கு மீறி கட்டணம் வசூலித்து வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்குமா அரசு?
இது குறித்து ஆர்டிஐ ஆர்வலர் ஹக்கீம் கூறுகையில், 'கரோனா தொற்று இருக்கிறதா... இல்லையா என்பதை தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்ள 500 ரூபாய் கட்டணமாக நிர்ணயித்து, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஆனால், இந்த நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை எந்த ஆய்வகங்களிலும் வசூலிப்பதில்லை. அதைவிடக் கூடுதலாக தான் இந்த பேரிடர் காலத்தில் வசூல் செய்துகொண்டிருக்கிறார்கள்.
ரூ.500க்குப் பதிலாக ரூ.2ஆயிரம் வசூல்:
இப்பரிசோதனைக்கு அதிகபட்சமாக 2ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்கிறார்கள். அதேபோன்று நுரையீரல் பரிசோதனைக்கும் அவர்கள் இஷ்டத்துக்கு கட்டணம் நிர்ணயம் செய்கிறார்கள். இதிலும் அரசாங்க உத்தரவை மதிப்பதில்லை.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தை தாங்கள் சம்பாதிப்பதற்கான வாய்ப்புள்ள நேரமாக தனியார் ஆய்வகங்கள் கருதுவது வேதனைக்குரியது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து, தனியார் மையங்களை ஆய்வு செய்து தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும்' என வேண்டுகோள் வைக்கிறார்.
ஒரு வேளை உணவுக்கே மக்கள் பெரும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் இது போன்ற மருத்துவ செலவினங்கள் அதிகரிக்குமானால், அதுவே அவர்களுக்குப் பெரும் துயரமாக மாறும்.
தற்போது மூன்றாவது அலைக்கு வாய்ப்பு இருக்கிறது என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கும் நேரத்தில் அரசு உடனடியாக இதற்கு ஒரு தனிக்குழு அமைத்து கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: மருத்துவமனை ஊழியர்கள் மீது தாக்குதல்: 7 பேர் மீது வழக்குப்பதிவு!