மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது, ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டம் மட்டுமன்றி, அருகிலுள்ள திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 50 டன்னுக்கும் மேலாக பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக விலை குறைந்து விற்பனை செய்யப்பட்ட மதுரை மல்லிகை, இன்று ஒரு கிலோ ரூ.1200க்கு விற்பனையானது. அதேநேரம் ஒரு கிலோ பிச்சி ரூ.800, முல்லை ரூ.900, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.500, செவ்வந்தி ரூ.200, செண்டு மல்லி ரூ.100, மரிக்கொழுந்து ரூ.100, பட்டன் ரோஸ் ரூ.300, பட்ரோஸ் ரூ.300 என விற்பனை செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக மதுரை மாட்டுத்தாவணி சில்லறை பூ வியாபாரிகள் சங்கத்தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், “விநாயகர் சதுர்த்தியையொட்டி கிலோ ரூ. 3,000க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட மதுரை மல்லிகை, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு ரூ.1200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பூக்கள் வரத்து மிகக் குறைவாக இருந்ததால், அப்போது விலை மிகக் கடுமையாக இருந்தது. மல்லிகைப்பூ அதிக அளவில் வரத் தொடங்கி இருப்பதால் கணிசமான விலையில் மல்லிகை மட்டுமின்றி, பிற பூக்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விலை நிலவரம் மேலும் ஒரு சில நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
இதையும் படிங்க: நவராத்திரி 6ஆம் நாள்: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்