மதுரை: மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அன்பழகன் ஆட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அன்பழகன், “தேர்தல் தேதி வெளியிடப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க மதுரை மத்திய தொகுதி, மதுரை கிழக்கு தொகுதி, மதுரை வடக்கு தொகுதி, மதுரை தெற்கு தொகுதி, மதுரை மேற்கு தொகுதி உள்ளிட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா, பரிசுபொருள்கள் வழங்குவதை தடுக்கும் நோக்கில் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழு 24 மணி நேரமும் செயல்படும்.
மாவட்டம் முழுவதும் 15 பறக்கும் படை குழுக்களும், 15 நிலையான கண்காணிப்பு குழுக்களும் தற்போது கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் விதிமீறல்கள் குறித்து தற்போது சில புகார்கள் எழுந்துள்ளன. அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். திரையரங்குகளில், லோக்கல் சேனல்களில் அரசு விளம்பரம் ஒளிப்பரப்பு செய்வதில் தேர்தல் நடத்தை விதிமீறல் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் அரசியல் தலைவர் உருவம், சின்னங்கள் இருந்தால் உடனடியாக நீக்கப்படும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் விதிமுறைகளுக்கு உள்பட்டு விளம்பரங்கள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க : உரிமம் பெற்ற துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல்!