மதுரை மாநகர் செல்லூர் போஸ் வீதியைச் சேர்ந்த தம்பதி ராபர்ட் மற்றும் மேரி. இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஆண் குழந்தை ஒன்று மேரிக்கு பிறந்தது. அக்குழந்தையை அதே பகுதியிலுள்ள ஷாஜகான் மற்றும் நாகூரம்மாள் தம்பதியருக்கு சட்ட விரோதமாக தத்து கொடுத்திருப்பதாக மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டிராஜன், குழந்தைகள் பாதுகாப்பு சமூகப்பணியாளர் அருண்குமார், செல்லூர் காவல் ஆய்வாளர் கோட்டைசாமி ஆகியோர் இச்சம்பவம் குறித்து விசாரித்தனர்.
இந்த விசாரணையில், இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வ ஒப்பந்த அடிப்படையில் சட்டவிரோதமாக குழந்தையை தத்து கொடுத்திருப்பது தெரியவந்தது. குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜன் கொடுத்த புகாரின்பேரில், காவல் துறையினர் அந்தக் குழந்தையை மீட்டு கருமாத்தூரிலுள்ள அரசு குழந்தை காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக இரு தம்பதி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.