சமூகத்தில் பதற்றத்தையும் நல்லெண்ணத்தையும் கேள்விக்குறியாக்கும் டிக்டாக், பிராங்க் ஷோக்களுக்கு காவல்துறை கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்று, உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடுத்து, தடையாணைப் பெற்ற வழக்கறிஞர் நீலமேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'மதுரையில் இருப்போர் அனைவரும் குடிகாரர்கள் என்று பொருள்படும் விதமாக 'பிராங்க் ஷோ' நடத்தி, அதனை டிக்டாக் செயலியிலும் பகிர்ந்துள்ள இளைஞர்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து பொதுமக்களில் பல தரப்பினரும் வெறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், சைபர் கிரைம் மூலம் நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளார்.
டிக்டாக் செயலி, பிராங்க் ஷோக்களை தடை விதிக்க வலியுறுத்தி, உயர்நீதிமன்றத்தில் தடையாணைப் பெற்றுள்ள வழக்கறிஞர் நீலமேகம், ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில்,
"மதுரையின் வரலாறு, புராணப் பெருமைகளை மறைக்கும் விதமாக சமூக வலைதளங்களிலும் திரைப்படங்களிலும் எதிர் மறைக் கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் முத்துக்குமார், டிக்டாக் செயலி, பிராங்க் ஷோக்களை தடைவிதிக்க வலியுறுத்தி வழக்குத் தொடுத்திருந்தார். இதனால் கலாசார சீர்கேடு மட்டுமன்றி, மாணவர்கள் மத்தியில் தவறான பழக்கவழக்கங்கள் பரவ வாய்ப்பு ஏற்படுகிறது என்றும் அம்மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் இவற்றைத் தடை செய்து முன்னுதாரணமான தீர்ப்பை வழங்கியிருந்தனர்.
பிராங்க் ஷோ உள்ளிட்ட சில பகிர்வுகள் குற்றச்செயல்களை ஊக்குவிப்பதைப் போன்று உள்ளது என்று கூறி, உடனடியாக அவற்றைத் தடை செய்து தீர்ப்பு வழங்கினர். அண்மையில் காவல் நிலையங்கள், காவல் வாகனங்கள் முன்பு நின்று கொண்டு டிக்டாக் செய்தார்கள் என்று கூறி, காவல் துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது.
மதுரையின் வரலாற்றுப் பெருமையை கேள்விக்குள்ளாக்கும் விதமாக சமீபத்தில் சிலர் பிராங்க் ஷோ செய்து, சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். தற்போது தடையிலிருக்கின்ற பிராங்க் ஷோக்களை துணிச்சலாகப் பதிவு செய்து வெளியிடுவது மிகவும் தவறு. பெண்களைக் கிண்டல் செய்வது, சமூக பதற்றத்தை ஏற்படுத்துவது, பிறகு நாங்கள் பிராங்க் ஷோ நடத்துகிறோம் என்று சொல்வதெல்லாம் கண்டனத்திற்குரிய போக்காகும்.
மதுரை மாநகர காவல்துறையும், ஆணையரும், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரும் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட ஒரு விஷயத்தைத் தொடர அனுமதிக்கக்கூடாது. தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் மட்டுமன்றி, இந்திய தண்டனைச் சட்டத்தின் அடிப்படையிலும் நடவடிக்கை மேற்கொள்ள முடியும்" என்றார்.
இதையும் படியுங்க: மதுரையை இழிவுபடுத்தும் வகையில் டிக்டாக் - வெறுப்பேத்தும் பிராங்க் ஷோக்கள்