மதுரை சிந்தாமணி ஓம் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (33). இவர் அப்பகுதியில் உள்ள நிறுவனத்தில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த அபிராமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வேலைக்கு செல்லும் முத்துக்குமார் எப்போதும் மாலை நேரத்தில் வீடு திரும்புவார்.
இந்த நிலையில், நேற்று (ஜூன்.14) காலை வேலைக்கு சென்ற முத்துக்குமார் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அபிராமி தனது மாமனார், உறவினர்களிடம் தொலைபேசியில் விசாரித்துள்ளார். அவர்களிடமிருந்து முறையாக எந்த பதிலும் வராதால் அபிராமி அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், முத்துக்குமாரை தேட ஆரம்பித்தனர். அப்போது அதே பகுதியில் முட்புதரில் முத்துக்குமாரின் இருசக்கர வாகனம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு சென்று காவல்துறையினர், இறந்து கிடந்த முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.