மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சாலை மிளகரனை பகுதி விலக்கில் இரவு நேரம் போக்குவரத்து காவல் துறையினர் அவ்வழியாகச் சென்ற ஷேர் ஆட்டோவை நிறுத்தி வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒரு ஷேர் ஆட்டோவை காவல் துறையினர் நிறுத்திய போது, அந்த ஆட்டோ நிற்காமல் சென்றதாகத் தெரிகிறது. இதனையடுத்து காவல் துறையினர் இருசக்கர வாகனத்தை விரட்டிச் சென்றனர். இதில் அந்த ஆட்டோ நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த பெண் பயணி ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின் அப்பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து வாகன சோதனை என்ற பெயரில் பொதுமக்களை துன்புறுத்துவதாகக் கூறியும், காவல் துறையினரால்தான் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் காவல் துறையினர் கண்டித்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அலங்காநல்லூர் காவல் துறையினர் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.