மதுரை மாநகரில் ரவுடிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், கஞ்சா, குட்கா வகைகள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனை போன்ற குற்றச் செயல்களை அறவே ஒழித்து விடவும் மதுரை மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி ரவுடிகள் நடமாட்டத்தை தீவிர கண்காணிப்பு செய்த காவல் துறையினர், கடந்த இரு வாரங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 13 பேரும், வழிப்பறி, ஆயுதங்கள் வைத்திருப்பு ஆகிய குற்றங்களுக்காக 7 பேரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாநகர் முழுவதும் ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக உதவி ஆய்வாளர்கள் தலைமையில், 7 தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொது அமைதிக்கும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கும் குந்தகம் விளைவிக்கக் கூடியவர்களைக் கண்டறிந்து பிரிவு 110 படி 56 பேர் மீது வழக்குப் பதிவு செய்தும், 113 பேரிடம் நன்னடத்தைக்கான பிணை ஆவணம் பெற்றும் அவ்வாறு பிணை ஆவண மீறுகை செய்து குற்றச் செயல் புரிந்த 7 பேரையும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தொடர்ச்சியாக கொலை கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஏழு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 52 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு இடையூறாக செயல்பட்டவர்கள் 714 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக கஞ்சா விற்றவர்கள் 29 பேரும், குட்கா பொருள்களை விற்பனை செய்ததற்காக 75 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அனுமதியில்லாமல் மதுபானம் விற்பனை செய்த 136 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகள் மற்றும் குற்றப்பின்னணி உள்ளவர்கள் மீதான இத்தகைய சட்ட நடவடிக்கைகள் தொடரும் என மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
இத்துடன் பகல் நேரங்களில் நடைபெறும் கொலை, கொள்ளை முயற்சி போன்ற குற்றங்களை தடுப்பதற்காக நகரின் முக்கிய பகுதிகளிலும் ஏற்கனவே குற்றச் சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளிலும் ஆயுதமேந்திய காவலர்கள் ரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் முக்கிய ரவுடி கும்பல்களின் நடவடிக்கைகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். இதுவரை, 69 நவுடிகளை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், 65 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் உடல் கண்டெடுப்பு!