பிரதமரின் கிசான் திட்டத்தில் நடைபெற்ற மோசடி குறித்து, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் தீவிர விசாரணை நடந்தது. இதில் தகுதியில்லாத பலருக்கு முறைகேடாகப் பல கோடி ரூபாய் பணம் கொடுத்து மோசடி நடந்திருப்பது அம்பலமானது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு நாள்தோறும் பணம் பறிமுதல் செய்வதும், மோசடியில் ஈடுபட்டோரைக் கைது செய்யும் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் 13 ஆயிரத்து 77 பேர் தகுதியற்றவர்களாகக் கண்டறியப்பட்டு அவர்களிடம் இருந்து பணத்தை மீட்கும் நடவடிக்கையில் சிறப்புக் குழு ஈடுபட்டு வருகிறது. தற்போது வரை 6 ஆயிரத்து 712பேரிடம் இருந்து 2 கோடியே 50 லட்சம் ரூபாய் திரும்பப் பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தகுதியற்றவர்கள் கண்டறியப்பட்டு அவரிடம் இருந்து காவல் துறை உதவியுடன் பணத்தை மீட்க மதுரை மாவட்ட ஆட்சியர் டிஜி வினய் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து காவலர்கள் பாதுகாப்புடன் பணத்தை மீட்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. மேலும் கிராமத்தினர் வங்கிக்கு வரத் தயக்கம் காட்டுவதால் கிராமம் முழுவதும் வங்கி அலுவலர்கள் முகாமிட்டு பணத்தை வசூல் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நாமக்கல்லில் ஆட்டோவிலிருந்து ரூ. 50 ஆயிரம் திருட்டு: போலீசார் விசாரணை