மதுரை: பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் அமைந்துள்ள இடத்தை கிராம நத்தமாக மாற்றவும், அங்கிருக்கும் வீட்டிற்கு தனது பெயரில் பட்டா வழங்கக்கோரியும் முத்துராமலிங்க தேவரின் உறவினரான என்.காந்திமீனாள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், "முத்துராமலிங்க தேவரின் தாய்வழி அத்தை மகனின் மகள் நான்.
தேவர் பிறந்த இடத்தில் உள்ள வீட்டில் எங்கள் குடும்பம் வசிக்கிறது. 260 ஆண்டுகளாக அந்த வீடு எங்கள் குடும்பத்திடம் உள்ளது. நினைவிடம் மற்றும் கோயிலில் தினமும் பூஜைகளை செய்து வருகிறேன். அந்த இடம் கிராம நத்தமாக இருந்தது. பின்னர் அரசு புறம்போக்காக வகை மாற்றம் செய்யப்பட்டது. அதனை மீண்டும் கிராம நத்தமாக வகை மாற்றம் செய்யவும், நான் குடியிருந்து வரும் வீட்டிற்கு பட்டா வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.விஜயகுமார் பிறப்பித்த உத்தரவில், "தேவர் நினைவிடம் அமைந்துள்ள இடம் நத்தமாக இருந்து, அரசு புறம்போக்காக வகை மாற்றம் செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. நில வகை மாற்றம் தொடர்பான ஆவணங்கள் இல்லாதபோது அது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க முடியாது.
நில வகை மாற்றம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றங்களில் தான் வழக்கு தொடர முடியும். மனுதாரர் நினைவிடம் அமைந்துள்ள இடத்தில் உள்ள வீட்டில் வசிப்பதாகவும், நினைவிடத்தில் தினமும் பூஜைகள் செய்வதாகவும் கூறுகிறார். ஆட்சியர், வட்டாட்சியரின் உத்தரவால் மனுதாரரின் இந்த உரிமை எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. அந்த உரிமைக்கு ஏதாவது பாதிப்பு வந்தால், மனுதாரர் சட்டப்படி நிவாரணம் தேடலாம்" என தெரிவித்து மனுவை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: குடியுரிமை வழக்கு - ரத்து செய்த உயர் நீதிமன்றம்