தமிழ்நாடு முழுவதும் 14 வகையான நெகிழிப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்தும் கடைகளில் சோதனை செய்து நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
மதுரையில் உள்ள திருமங்கலம் - உசிலம்பட்டி சாலையில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான குடோனில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை பதுக்கி வைத்து, இரவு நேரங்களில் சப்ளை செய்துவருவதாக நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் சுருளிராஜன் தலைமையிலான குழுவினர் அந்த குடோனில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள், சில்வர் சாயம் பூசப்பட்ட தட்டுகள், மெழுகு தடவப்பட்ட டீ கப்புகளை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் குடோன் உரிமையாளர் கண்ணனிடம் நகராட்சி அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: இளம் பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் எரித்துக் கொலை