ஆண்டிபட்டியைச் சேர்ந்த ரத்தினவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “ஆண்டிப்பட்டி பகுதியிலுள்ள 30 பஞ்சாயத்துகளில் 150 கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் முதன்மையான தொழில் விவசாயமாக இருந்து வருகிறது. ஆனால் இப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 412 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் ஆற்றிலிருந்து கண்மாய்களுக்கு நீர்நிரப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தும்கூட குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதியில் விவசாயம் செய்வோர், ஆடு, மாடு வளர்ப்போர் தங்கள் தொழில்களை விட்டுவிட்டு வேறு மாநிலங்களுக்கு வேலைக்கு செல்லக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. முல்லைப்பெரியார் உபரிநீரை குள்ளப்ப கவுண்டன்பட்டியிலிருந்து ஏத்தனகோவில் வரை, 62 கிலோமீட்டர் வரை குழாய்கள் அமைத்து அவற்றின் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்க, 1987ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இவ்வாறு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வருவதன் மூலம் பொதுப்பணித்துறையின்கீழ் உள்ள 21 குளங்கள், 300 ஊரணிகளில் தண்ணீர் நிரப்ப முடியும். இது குறித்து பலமுறை மனு அளித்தும் எந்தப் பயனும் இல்லை. எனவே இப்பகுதிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (நவ.11) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் மனுவை பொதுப்பணித் துறை செயலர் 12 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.