கன்னியாகுமரி: குமரி மாவட்டம் ராமன்புதூரைச் சேர்ந்த செவிலியர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் தக்கலையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறேன். என்னுடன் பணியாற்றும் அலுவலக கண்காணிப்பாளர் கிஷோர் குமாரும், அலுவலக உதவியாளராக உள்ள தாணுவும் பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எனக்கு துன்புறுத்தல் கொடுத்துவருகின்றனர்.
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்
இது குறித்து வெளிநாட்டில் பணி புரிந்து வரும் எனது கணவரிடம் தெரிவித்தேன். அவரும், இ- மெயில் மூலமாக காவல்துறையினரிடமும், துறை ரீதியாகவும் புகார்கள் தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தும் அலுவலர்கள் இனிமேல் இதுபோல் நடக்காது; அவர்களை எச்சரித்து விட்டோம் எனக் கூறிவிட்டனர். ஆனால், தொடர்ந்து என்னை கிஷோர் குமார் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார்.
நான் அலுவலகத்தில் நடக்கும் போது காலை நீட்டி இடறி விழச் செய்வது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது, வருகைப் பதிவேட்டினை மறைத்து வைத்துக்கொண்டு மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும் நான் 12 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சிம்கார்டை இவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனது ஆதார் கார்டு மூலம் வாங்கி வைத்துள்ளார்.
விசாகா கமிட்டி மூலம் விசாரணை
அதில், வரும் தகவல்களை எடுத்து வைத்துக்கொண்டு என்னை கேலி செய்வதும், மிரட்டுவதும் என தகாத காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். இவர்மீது பல்வேறு புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் மீது நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்கும் விசாகா கமிட்டி மூலம் விசாரணை நடத்தி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேலுமணி வழக்கு குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், மருத்துவ மண்டல கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: 'பாலியல் ரீதியான புகார்களை கூடுதல் கவனத்துடன் மாநில அரசு கையாள வேண்டும்'