மதுரை: நகரின் சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த எஸ்.பிரகாஷ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "மதுரை நகரில் சாலையில் மாடுகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.
குறிப்பாக முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் கால்நடைகள் அதிகளவில் உலவுகின்றன. இரவில் சாலைகளிலேயே மாடுகள் படுத்து தூங்குவதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. கால்நடைகள் திடீரென குறுக்கே பாய்வதால் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர்.
கால்நடைகள் உரிமையாளர்கள் கால்நடைகளை சாலைகளில் உலவ விட்டு வீடுகளில் இருந்து விடுகின்றனர். கால்நடைகளை பாதுகாக்க கால்நடைகள் நல வாரியம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த வாரியம் சாலைகளில் கால்நடைகள் திரிவதால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மதுரை நகர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளில் பொதுமக்களுக்கும்,
வாகனத்தில் செல்வோருக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள், வீட்டு வளர்ப்பு பிராணிகள் சுற்றித் திரிவதை தடுக்கவும், கால்நடைகளை சாலைகளில் விட்டுச் செல்லும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், சாலைகளில் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து, பசு மடங்களில் அடைத்து உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம், விக்டோரியா கெளரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மதுரை நகரில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதில் அளிக்க உத்தரவு இட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: பெயர் மாற்றம் குறித்த வழக்கு: கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உத்தரவு!