வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடத்த அனுமதியும் காவல்துறை பாதுகாப்பும் வழங்கக்கோரிய மனுவை உயர் நீதிமன்றக்கிளையின் தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தபோது, மனுவை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த ராமு என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "சிவகங்கை மாவட்டம், சுள்ளம்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சின்னையா சுவாமி திருக்கோயில் திருவிழாவின்போது வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இது பல ஆண்டுகள் காலமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜனவரி 24ஆம் தேதி பொங்கல் விழாவும் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்வும் நடத்தத் திட்டமிடப்பட்டு, அதற்காக அனுமதிகோரி அதிகாரிகளிடம் ஜனவரி 4ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை எவ்விதமான பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
ஆகவே, ஜனவரி 24ஆம் தேதி சிவகங்கை மாவட்டம், சுள்ளம்பட்டி கிராம அருள்மிகு ஸ்ரீசின்னையா சுவாமி திருக்கோயில் திருவிழாவில், வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடத்த அனுமதியும் காவல்துறை பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு மனுதாரரின் மனுவை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி பேசியதை திரையிட்டு காட்டி மு.க.ஸ்டாலின் விமர்சனம்!