மதுரை: ஆகஸ்ட் 1ஆம் தேதி டெல்லியில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த கொடூரத்தை நிகழ்த்திய நான்கு பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்ககளை அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.
இதற்காக, ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு சில நாட்கள் முடக்கப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் புகைப்படத்தை வெளியிடுவது சட்டப்படி குற்றம் என்றும் ராகுல் காந்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மதுரை தாசில்தார் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுதாக்கல்
அதில், "ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை 19.5 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். அவரது, கட்சித் தலைவர்கள் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தது தொடர்பான புகைப்படங்களை மறுட்வீட் செய்துள்ளனர்.
இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்களான மாணிக்கம் தாகூர், கே.சி. வேணுகோபால் ஆகியோரும் அடங்குவர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது கட்சியைச் சார்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைவர்கள் தங்களது அரசியல் சுயலாபத்திற்காக சட்ட விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.
போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை
பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினரின் அடையாளங்களை வெளியிடுவது சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. மேற்படி நபர்கள் சட்டத்தினை நன்கு அறிந்தவர்கள். இருப்பினும், அரசியல் சுயலாபத்திற்க்காக சட்ட விதிமுறைகளை வேண்டுமென்றே காற்றில் பறக்கவிட்டுள்ளார்கள்.
எனவே, ராகுல் காந்தி, மாணிக்கம் தாகூர், கே.சி. வேணுகோபால், அவரது கட்சியினை சார்ந்த நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ட்விட்டரில் மீண்டு(ம்) வந்த ராகுல் காந்தியின் கணக்கு!