மதுரையைச் சேர்ந்த விரோனிகா மேரி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்சி, பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கக் கூடிய மூன்று பிளான்ட்டுகள் செயல்பட்டு வந்தன. இவை ஒரு மணிநேரத்திற்கு 140 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தயாரிக்கக்கூடிய திறன் கொண்டவை. ஆனால் 2003ஆம் ஆண்டு முதல் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுத்தப்பட்டு அப்பகுதி செயல்பாடு இல்லாமல் இருந்து வருகிறது.
இதேபோல் செங்கல்பட்டு பகுதியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான HLL பயோடெக் நிறுவனம், 2012ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, தடுப்பூசி தயாரிப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகள் இருந்தும் தற்போதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.
கரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த திருச்சியில் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் செயல்படாமல் இருக்கும் ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரங்களில் பணி மேற்கொள்ள போதுமான கட்டமைப்பு வசதிகளை செய்து ஆக்சிஜன் தயாரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் இரண்டு நிறுவனங்கள் புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இதனால் தடுப்பூசிகள் பல மாநிலங்களுக்கு தாமதமாகக் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே செங்கல்பட்டில் இயங்கிவரும் HLL பயோடெக் நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி தயாரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி எளிதாகச் சென்றடையும் என அலுவலர்களுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை சரிசெய்யவும், தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்தவும் திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணியை மேற்கொள்ளவும், அதேபோல் செங்கல்பட்டு பகுதியில் செயல்பட்டுவரும் HLL பயோடெக் நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி தயாரிப்பை மேற்கொள்ளவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு, ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் எழுப்பி மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் கரோனா தொடர்பான வழக்குகள் அனைத்தும் சென்னை நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்த மனு சென்னை தலைமை நீதிபதிகள் சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெல் நிறுவனம் சார்பாக உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 1981ஆம் ஆண்டு திருச்சியில் இயங்கும் பெல் நிறுவனத்தில் இயந்திரங்களுக்குத் தேவையான சக்தி அளிக்கவே ஆக்ஸிஜன் தயாரிக்கப்பட்டது.
அதன்படி 2003ஆம் ஆண்டு ஆக்ஸிஜன் தயாரிக்கக்கூடிய மூன்று எந்திரங்களுக்குத் தேவையான உபரி பொருள்கள், பாகங்கள் கிடைக்காததால் அவை அனைத்தும் மூடப்பட்டன. ஹரித்துவார் மற்றும் போபால் பகுதியில் இயங்கி வரும் பெல் பொதுத்துறை நிறுவனத்தின் சார்பாக 30 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி தொடங்குவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை மே 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: திருமணத்திற்காக இ-பதிவு விண்ணப்பிக்க தற்காலிகத் தடை!