மதுரை மீனாம்பாள் புரத்தைச் சேர்ந்த சமய செல்வன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில்,'நான் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் மத்திய யூனியனின் இளைஞர் அமைப்பு செயலராக உள்ளேன். தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக ஏராளமானோர் சிங்கப்பூர், சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ஓட்டுநர் உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரோனா வைரஸ் சீனாவின் நகரங்களில் பரவியதில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இதுவரை மூன்றாயிரம் பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஊடகங்களில் சீனாவில் வெகுவிரைவில் அவசரநிலை பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதனால் பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சீனாவில் இருக்கும் சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழ்நாடு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சிரமத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளது. இது தொடர்பாக அங்கிருப்பவர்களும் அவரவர் குடும்பத்தைத் தொடர்பு கொண்டு அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஆகவே, சீனாவில் இருக்கும் தமிழர்கள் பாதுகாப்பான முறையில் தாயகம் திரும்புவதை உறுதிப்படுத்தவும், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதை உறுதிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதையும் படியுங்க: கரோனா வைரஸ்ஸிலிருந்து பாதுகாக்க - மதுரையிலிருந்து சீனா செல்லும் முகக் கவசம்!