மதுரை: பெரியகுளம் தாலுகா பகுதியில் 182 ஏக்கர் அரசு நிலத்தைக் கடந்த அதிமுக ஆட்சியில், அலுவலர்கள் துணையோடு அதிமுகவைச் சேர்ந்த அன்னபிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் முறைகேடாக குவாரி நடத்தி பல நூறு கோடி ரூபாய் மோசடி நடத்தியது தெரிய வந்தது.
இது தொடர்பாக அதிமுகவினர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் மீது வழக்கு பதியப்பட்டு தற்போது சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் கடந்த வாரம் அதிமுகவைச் சேர்ந்த அன்னபிரகாஷ்
குடும்பத்தினருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த வழக்கில் தங்களை கைது செய்யாமல் இருக்க அன்னப்பிரகாஷ் மகள்கள் சிவனேஸ்வரி, ஜெயா, மற்றும் ஜெயபிரகாஷ் பாண்டி, லதா, பாப்பம்மாள் உள்ளிட்ட குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி, "மனுதாரர்களை விசாரணைக்கு ஆஜராக கூறி தான் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரிடம் காவல்துறையினர் விசாரணை செய்வது என்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே மனுதாரர்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
மனுதாரர்களை கைது செய்ய வேண்டுமானால் குறிப்பிட்ட கீழமை நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று காவல்துறையினர் கைது செய்யலாம்” எனக் கூறி பிரகாஷின் குடும்பத்தினரின் முன்பிணை மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க:'திமுக கோவை கோட்டையை முற்றிலுமாக கைப்பற்றிவிட்டது!'