மதுரை : தமிழகத்தின் பாரம்பரியமிக்க கல்வி நிறுவனங்களுள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் ஒன்று. கடந்த 1966-ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, கடந்த 57 ஆண்டுகளாகத் தென் மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது. அண்மைக் காலமாக போதுமான நிதி வசதியின்றி பணியாற்றும் நபர்களுக்கு ஊதியம் தருவதற்கு இயலாமல் தள்ளாடி வருகிறது.
இதனால் அவ்வப்போது போராட்டங்களும் வெடித்து வருகின்றன. இதற்கிடையே இப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கும்கூட ஓய்வூதியம் முறையாக வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை அடுத்து கடந்த மாதம் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் துணைவேந்தர் அலுவலகத்தின் முன்பாக ஒருநாள் அடையாளப் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தை அடுத்து அன்றைய தினமே அவசர அவசரமாக அவர்களது ஓய்வூதிய பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அவர்கள் சிறப்பு நேர்காணல் வழங்கினர்.
அப்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கத்தின் செயலாளர் சுவாமிநாதன் கூறுகையில், "கடந்த 2 ஆண்டுகளாகவே 60 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் இருந்து 93 வயது வரை உள்ளோர் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பிடமும் முறையீடு செய்த பின்னரும்கூட எங்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லை.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மிகுந்த சிரமத்தில் இருக்கின்ற காரணத்தால், எங்களுக்கான ஓய்வூதியம் வழங்க இயலவில்லை என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். எங்களிடையே உள்ள குடும்ப ஓய்வூதியர்கள் சரியான நேரத்தில் ஓய்வூதியம் கிடைக்கப் பெறாத காரணத்தால் கேன்சர், டயாலிசிஸ் மற்றும் வயோதிகம் காரணமாக தங்களின் மருத்துவச் செலவுகளுக்குக்கூடப் பணமில்லாமல் சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஓய்வூதியர்களை மற்ற அரசு, கல்லூரி, பள்ளிக் கல்வித்துறையில் ஓய்வு பெற்றவர்களோடு இணைத்த மாவட்டக் கருவூலம் மூலமாக வழங்கலாம் அல்லது ஆண்டு ஒன்றிற்கு ரூ.75 கோடியை தமிழக அரசின் நிதிநிலை மூலமாக ஒதுக்கீடு செய்து வழங்கலாம்.
ஒருவேளை கருவூலம் வாயிலாக வழங்குவதற்கு நடைமுறைச் சிக்கல் இருக்குமானால் மூன்றாவதாக, ரூ.800 கோடியை அரசின் எந்தத் துறையிலாவது வைப்புத்தொகையாக்கி, அதன் மூலம் வருகின்ற வட்டியை எங்களுக்கு தமிழக அரசு ஓய்வூதியமாக வழங்கலாம். பத்து ஆண்டுகள் கழித்து அத்தொகையை அரசே திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். எங்களது குடும்பத்தினர் 2 ஆயிரம் பேருக்கும் நல்ல பதிலைத் தமிழக முதல்வர் தர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்" என்று கோரிக்கை வைத்தார்.
இதனை அடுத்து அதே சங்கத்தின் இணை செயலாளர் கிரிதரன் கூறுகையில், "ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வருமா? வராதா? என்ற எதிர்பார்ப்பிலேயே எங்களது நிலைமை உள்ளது. தாமதமாகக் கிடைக்கும் ஓய்வூதியம் குறித்துப் பல முறை முறையீடு செய்தும்கூட இதுவரை எங்களுக்கு எந்தத் தீர்வும் இல்லை. அந்தந்த மாதத்தில் சரியான நாளில் ஓய்வூதியம் கிடைத்தால் மன உளைச்சல் இன்றி இருப்பார்கள். ஆகையால் இதுபோன்ற சிரமங்களை தமிழக அரசும் முதல்வரும் எண்ணிப் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும் சங்கத்தின் பொருளாளர் பாலகுருசாமி கூறுகையில், "தணிக்கையில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதிலளித்தால் மட்டுமே பல்கலைக்கழகத்திற்கான நிதியைத் தர முடியும் என தமிழக அரசு கூறிவிட்டது. அச்சமயம் இருந்த நிர்வாகக் குறைபாடுகள் காரணமாகவே தணிக்கை ஆட்சேபனைகள் (Audit Objections) இருந்தன இதற்கு ஓய்வூதியர்கள் பொறுப்பல்ல.
இந்தப் பல்கலைக்கழகத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெற்ற நபர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதே பெரும் துயரமாக மாறிவிட்டது. சுமார் 600க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களும் 400க்கும் மேற்பட்ட குடும்ப ஓய்வூதியர்களும் ஓய்வூதியத்திற்காக கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்" என்றார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தனது மூலதன நிதியாக ரூ.300 கோடி வரை கொண்டிருந்தது. ஊதியம் மற்றும் இன்னும் பிற நிர்வாகச் செலவுகளுக்காக அவை அனைத்தும் செலவழிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தற்போது ஓய்வூதியர்களும் பாதிப்பைச் சந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: "திருச்சியில் ரவுடிசத்திற்கு வேலை இல்லை" - டிஐஜி பகலவன் பேட்டி!