மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் வசித்து வரும் முனியாண்டி என்பவர் தனது வீட்டில் பசு மாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.
அந்தப் பசுமாட்டுக்கு வைக்கும் பழம், காய்கறிகள், தண்ணீர் அரிசி போன்றவற்றை பாலமேடு மஞ்சமலை கோயில் காளை பசுவுடன் சேர்ந்து சாப்பிடும் என்று கூறப்படுகிறது.
தற்போதைய ஊரடங்கால் வருமானமின்றி தவித்த முனியாண்டி, வாடிப்பட்டியிலுள்ள ஒருவருக்கு தனது பசுமாட்டினை விற்க முடிவெடுத்து, ஒரு சரக்கு வாகனத்தில் பசுவை ஏற்றினார்.
இதை பார்த்த கோயில் காளை, பசுவைப் பிரிய மனமில்லாமல் அந்த வாகனத்தைச் சுற்றி சுற்றி வந்தது. பின்னர் வாகனத்தை இயக்க முயற்சித்தபோது வாகனத்தை இயக்கவிடாமல் வழிமறித்தும் சுமார் 1 மணி நேரம் நின்றது.
ஒரு வழியாக சரக்கு வண்டி செல்லத்தொடங்கியதும், வண்டியின் பின்னாலே ஒரு கிலோ மீட்டர் தூரம் காளை ஓடி மூச்சிறைக்க நின்றது.
ஒன்றாக வளர்ந்த பசு மாட்டின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் காளைமாடு நடத்திய பாசப்போராட்டம் காண்போரின் கண்களில் ஆனந்த கண்ணீரை வரச்செய்கிறது.
இதையும் படிங்க: மதுரையில் மீண்டும் நீட்டிக்கப்பட்ட முழு ஊரடங்கு!