கரோனா இரண்டாவது அலையின் போது தமிழ்நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவியது.
படுக்கை பற்றாக்குறையை ஈடுகட்ட ரயில் பெட்டிகள் தற்காலிக கரோனா சிகிச்சை அறைகளாக மாற்றம் செய்யப்பட்டன. மேலும் மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில்வே மருத்துவமனைகளிலும் சிறப்பு கரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டது.
இங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினர், காவல் துறையினர், ரயில் ஓட்டுநர்கள் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரை ரயில்வே மருத்துவமனையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 250 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் நிறுவப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான பணிகள் விரைவில் முடிவடையும் என ரயில்வே அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.