மதுரை மாவட்டத்திலுள்ள பத்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (மார்ச்.21) அறிமுகம் செய்து பேசினார்.
மதுரை, பழங்காநத்தம் சந்திப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: “ஆங்கிலேயர் ஆட்சியில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலையைவிட மிக மிக தியாகம் செறிந்த போராட்டம் பெருங்காமநல்லூரில் நடைபெற்றது. ஆனால் அது வரலாற்றில் மறைக்கப்பட்டது. நாம் தமிழர் ஆட்சியில் இந்த வரலாறுகள் எல்லாம் பள்ளிகளில் பாடமாகக் கொண்டு வரப்படும்.
சில சாதிகளை குற்றப்பரம்பரையினராக அறிவித்து கைரேகைச் சட்டத்தை ஆங்கிலேயர் கொண்டு வந்தபோது, கட்டை விரலை வெட்டியெறியுங்கள் என முத்துராமலிங்கத் தேவர் சொல்லியதை, பல்லாயிரம் இளைஞர்கள் பின்பற்றி அச்சட்டத்திற்கு தங்களது தீவிர எதிர்ப்பைத் தெரிவித்தனர். இவையெல்லாம் வரலாறு.
இந்த உலகில் வாழுகின்ற எல்லோரையும் அவரவர் தாய்மொழிதான் அடையாளப்படுத்துகிறது. ஆகையால் தமிழர்களுக்கு மொழி, இன உணர்வு மிக மிக முக்கியம். சாதி, மதம் ஆகிய உணர்வுகள் இந்த நாட்டை ஒருபோதும் ஆளக்கூடாது. ஆகையால் இவை இரண்டையும் அரசியலிலிருந்து பிரிப்பது எங்களது கடமை.
வழிப்போக்கர்களாய் வந்தவருக்கும்கூட வாரி வழங்கிய தமிழினம், இன்று இலவசத்திற்காக கையேந்தி நிற்கிறது. நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் கல்வியையும் மருத்துவத்தையும் மட்டுமே இலவசமாக வழங்குவோம். ஒரு நாட்டின் குடிமக்கள் கற்ற கல்விதான் அந்த நாட்டின் மிகப் பெரிய செல்வம். தமிழ்நாட்டினர் இப்போதும் அரசியல் அடிமைகளாகத்தான் வாழ்ந்து வருகின்றனர். இதனை முதலில் நாம் மாற்ற வேண்டும்.
இப்போது நடைபெறுவது தேர்தல் அல்ல. நல்லாட்சி வழங்குவதற்கான புரட்சிகர போர்க்களம். ஓட்டுக்கு காசு வாங்குவது கேவலம். உழைக்கும் மக்களை சுரண்டிய பணம் இது. எங்கள் ஆட்சியில் லஞ்சம், ஊழல் செய்தவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்வோம். வாழ்நாள் முழுவதும் பணி செய்ய முடியாத நிலையை உருவாக்குவோம். தன்னலமற்ற அன்பான சர்வாதிகாரமே எங்கள் நிர்வாகம்.
நாம் தமிழர் ஆட்சியல் டாஸ்மாக் கடைகள் இழுத்து மூடப்பட்டு, பனங்கள், தென்னங்கள் ஆகியவற்றை தேசிய பானமாக அறிவித்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்வோம். எங்கள் இனத்திற்காகவும் இனத்தின் மானத்திற்காகவும் நாங்கள் களம் காண்கிறோம். உலகிலேயே தலைசிறந்த நாடாக தமிழ்நாட்டை மாற்றிக்காட்டுவோம். இதுவரை அதிமுக, திமுகவுக்கு வாய்ப்பளித்த நீங்கள், ஒருமுறை எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள்” எனப் பேசினார்.
தேர்தலில் போட்டியிடும் நாதக வேட்பாளர்கள்
- மத்திய மதுரை- பாண்டியம்மாள்
- மதுரை வடக்கு - அன்பரசி
- மதுரை கிழக்கு - லதா
- திருமங்கலம்- சாராள்
- திருப்பரங்குன்றம்- ரேவதி
- மதுரை மேற்கு- வெற்றிக்குமரன்
- சோழவந்தான்- செங்கண்ணன்
- மதுரை தெற்கு- அப்பாஸ்
- மேலூர்- கருப்புச்சாமி
- உசிலம்பட்டி- ஐந்துகோவிலான்
இதையும் படிங்க:இரட்டை இலை வடிவில் சிகை அலங்காரம் செய்து வாக்கு சேகரிக்கும் அதிமுக தொண்டர்!