மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போனிபாஸ், முத்துக்குமார், ராம்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல்செய்தனர்.
அந்த மனுவில், "தமிழ்நாடு அரசு திரையரங்கில் 100 விழுக்காடு இருக்கைகளுடன் திரைப்படத்தை வெளியிட அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையை ரத்துசெய்ய உத்தரவிட வேண்டும்.
கரோனா பேரிடர் காலத்தில் திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கை வசதிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. திரையரங்கு முன் ரசிகர்கள் அதிகளவில் கூடுவதையும் கட்டுப்படுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் உத்தரவின்படி திரையரங்கங்கள் அனைத்தும் 50 விழுக்காடு இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அறிவித்துள்ளது. அதனை உறுதிசெய்ய உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், திரையரங்கத்திற்கு வரும் ரசிகர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த திரையரங்க உரிமையாளர்களே போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். ரசிகர்களின் வருகைக்கேற்ப காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கட்டணம் உயர்வு சம்பந்தமாக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக நடிகர் விஜய் பொங்கலுக்கு வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படத்தை 100 விழுக்காடு இருக்கைகளுடன் அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று அரசு அனுமதியளித்தது.
ஆனால், பல்வேறு தரப்பினரிடமிருந்து இந்த முடிவிற்கு எதிர்ப்புகள் வந்ததையடுத்து தமிழ்நாடு அரசு மீண்டும் 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டும் அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'திரையரங்கு இல்லை என்றால் சினிமா இல்லை' - நடிகர் சிம்பு