மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," தமிழ் மொழியின் ஒப்பற்ற சிறப்புகளில் ஒன்றான திருக்குறள் உலகப் பொதுமறையாக போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க திருக்குறள் இதுவரை பிரெய்லி முறையில் வெளியிடப்படவில்லை. இதனால் பார்வை மாற்றுத்திறனாளிகள் அதன் சிறப்புகளை அறிய முடியவில்லை.
கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 6 முதல் 12ஆம் வகுப்பிற்குள் சுமார் 1,050 குறள்களை அனைத்து மாணவர்களும் பயில வேண்டும் என்று அரசாணை வெளியிட்டது. ஆனால், பார்வையற்றவர்கள் பயில்வதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆகவே பார்வையற்றவர்கள் தாங்களே படித்து, பயன்பெறும் வகையில் தமிழ், ஆங்கில மொழிகளில் பிரெய்லி முறையில் திருக்குறள் புத்தகங்களை வெளியிட உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு இது குறித்து உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:குரூப் 1 தேர்வு தள்ளிவைப்பு - TNPSC அறிவிப்பு