சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரும் காவல் விசாரணையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணை குறித்த நிலை அறிக்கையை சிபிஐ உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதேபோல் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் துன்புறுத்தப்பட்ட மற்றொரு கைதியான ராஜாசிங் வழக்கு குறித்து சிபிசிஐடி காவல் துறையினரும் நிலை அறிக்கை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் சிபிஐ தரப்பில் இரண்டு வழக்குகளில் 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு வழக்குகளையும் ஒன்றாக இணைத்து மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் அளித்த பதில்கள்:
சாத்தன்குளம் காவல் நிலையத்தில் மற்றொரு கைதி ராஜாசிங், மார்டின் ஆகியோர் காவல்துறையினரால் தாக்கப்பட்டது குறித்தும், தட்டார் மடத்தில் செல்வன் கடத்தி கொலை செய்யப்பட்டதில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணனுக்கு உள்ள தொடர்பு குறித்தும் சிபிசிஐடி காவல் துறையினர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ தரப்பில் தற்போது வரை நடைபெற்ற விசாரணை குறித்து சிபிஐ தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ’பாபர் மசூதி தீர்ப்பு, சட்டத்தின் ஆட்சிக்கு ஏற்பட்ட தலைகுனிவு’ - ஸ்டாலின்