மதுரை: அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. இதில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பால் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியானது. இதனால் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து மதுரை விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அமமுக தொண்டர் ஒருவர் 'துரோகத்தின் அடையாளம் எடப்பாடி' என குரல் எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் ஈபிஎஸ்க்கு எதிராக குரல் எழுப்பியவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், உசிலம்பட்டி எம்.எல்.ஏ., ஐயப்பன் மற்றும் ஓ.பி.எஸ்., ஆதரவு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் 500க்கும் மேற்பட்ட கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
முன்னதாக ஆர்ப்பாட்ட மேடையில் முன்னாள் எம்.பி., கோபால கிருஷ்ணன் பேசுகையில் "எடப்பாடி பழனிசாமி பணத்தால் தேர்தலில் வென்றுவிடலாம் என நினைக்கிறார். ஒரு போதும் வெற்றி பெற முடியாது. அதிமுக கட்சியை எடப்பாடி பழனிசாமி சிதைத்து விட்டார். அம்மா, ஜெயலலிதா உயிரை பணயம் வைத்து ஆட்சி நடத்தினார். ஆனால், நீங்கள் திமுகவிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டீர்கள்.
அதிமுக பேரியக்கத்தின் தகுதியை இழக்க வைத்து விட்டீர்கள். ஆர்.கே. நகர் தேர்தல் முதல் ஈரோடு கிழக்குத் தேர்தல் வரை எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி தான் மிச்சம். எனவே, அவருக்கு காலம் பதில் சொல்லும். பதவிக்காக அ.தி.மு.கவின் சட்ட விதிகளை உடைத்துவிட்டார். இதற்கு உரிய பலனை அடைவார். கொங்கு பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வியே கிடைத்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ஆதி திராவிடர் மாணவர்களுக்கு 4 இடங்களில் நவீன வசதிகளுடன் விடுதிகள்