மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ தொடக்கம் முதலே முன்னிலை பெற்று இருந்தார். ஆனால், வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்தது. மொத்தமுள்ள 31 சுற்றுகளில் 30-வது சுற்று முடிவில் செல்லூர் ராஜூ 80 ஆயிரத்து 57 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற சான்றிதழை பெற்ற பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
என்னை மூன்று முறை வெற்றி பெற வைத்த மதுரை மேற்கு சட்டப்பேரவை தொகுதி மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு விஸ்வாசமாக உழைப்பேன் என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மதுரை வாழ் மக்களுக்கு ரூ. 5,000 கோடிகளுக்கு மேல் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி உள்ளது. அதில், பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தத் திட்டங்களை புதிதாக அமைகின்ற அரசு விரைவாக செய்து முடித்திட வேண்டும். அவ்வாறு முடியாதபட்சத்தில் மதுரை மக்களின் குரலாக நான் வெளியிலும், சட்டமன்றத்திலும் ஒலிப்பேன். இதுவரை தமிழ்நாடு வரலாற்றிலேயே இவ்வளவு திட்டங்களை எந்த அரசும் மதுரை மக்களுக்கு செய்தது கிடையாது,
மதுரை மக்களின் நீண்டநாள் பிரச்னையான குடிநீர் பிரச்னைகளுக்கு 1,795 கோடி நிதி ரூபாய் ஒதுக்கப்பட்டு முல்லைப் பெரியாறில் இருந்து பெரியார் கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக மதுரைக்கு இரும்பு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை அம்மாவின் அரசு செய்தது. இன்னும் நாற்பது ஆண்டுகளுக்கு மதுரைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராத ஒரு நிலையை ஏற்படுத்தும் வகையில் அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன். என்னை முதல் முதலாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் ஒரு வலுவான ஆட்சி செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் என்றும் உண்மையுடன் இருப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற எம்ஜிஆர் அவர்களின் கருத்தின்படி இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்களை தேர்வு செய்யவில்லை என்றால் மக்களை திட்டுவது, பழியைப் போடுவது போன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம். வெற்றி வாய்ப்பு குறித்து எங்கள் தலைவர்கள் எல்லாம் கூடிப்பேசி முடிவெடுப்போம். பொதுமக்கள் திமுகவிற்கு மிகப்பெரிய வெற்றியை தந்து விடவில்லை . தற்போது தேர்வு செய்யப்பட்ட திமுக அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை கவனிப்போம்
இதுவரை திமுக அரசு மதுரைக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் நல்லது ஒன்றும் செய்யவில்லை. தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு என்ன செய்கிறது என்பதை எதிர்காலம் தான் சொல்ல வேண்டும். இந்த ஆட்சி இளைஞர்களுக்கு எப்படி வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர போகிறது என்பதை பார்ப்போம் என்றார்.