மதுரை புறநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோயிலில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, ”மருத்துவத் துறையில் ஏழை எளிய மாணவர்களின் கனவை நனவாக்கும் எண்ணத்தில், 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி உருவாக்கி, அதில் 435 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கு அரசாணை வழங்கி, அதற்குரிய முழு செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தார்.
நீட் தேர்வு
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்ய சட்டத்தை நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலைப் பெறுவோம் என ஸ்டாலின் உறுதியளித்து, அதற்கென ஒரு குழுவை அமைத்தார். ஆனால், சென்னை உயர் நீதிமன்றமோ இந்தக் குழு உச்ச நீதிமன்றம் அனுமதி பெறப்பட்டதா, இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமையாதா என்று கேள்வி எழுப்பியுள்ளது.
இன்றைக்கு நீட் விவகாரத்தில் அரசு செல்லும் பாதை சரியான பாதையா, இதற்கு விடிவு கிடைக்குமா, கிடைக்காதா என்று மாணவர்கள் எதிர்நோக்கி காத்துள்ளனர். கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், குரூப்-1 குரூப்-2 ரயில்வே மற்றும் வங்கி ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு மதுரை உள்பட ஆறு நகரங்களில் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியை கொடுத்தனர். அதை அரசு நிறைவேற்ற வேண்டும்.
4 விழுக்காட்டினருக்கு மட்டுமே 2ஆம் தவணை தடுப்பூசி
தற்போது கரோனா இரண்டாம் அலை பாதிப்பில் தமிழ்நாடு நான்காம் இடத்தில் உள்ளது. அதேபோல் தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 18 விழுக்காடு நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், நான்கு விழுக்காடு நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி மருந்தும் செலுத்தப்பட்டுள்ளது.
அரசு மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து மூன்றாவது அலை வருவதற்குள் தமிழ்நாட்டில் உள்ள ஏழு கோடி மக்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
’பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்க’
பள்ளிக்கல்வித் துறையில் பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். அதை நிறைவேற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை குறைப்போம் என்று கூறினார்கள். ஆனால் பொருளாதார சூழ்நிலையை தற்போது காரணம் காட்டுகிறார்கள்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறை ஊழல் துறையாக இருந்தது - அமைச்சர் மூர்த்தி