மதுரை: சிம்மக்கல் அனுமார்கோவில் படித்துறை அருகே மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 1366 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடத்தை வணிக பயன்பாட்டிற்காக குணசேகரன் என்பவருக்கு கோயில் நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த இடத்தை இன்று அதிகாரிகள் ஆய்வு செய்த போது கோயில் இடத்தை சட்டவிரோதமாக ராஜேந்திரன் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த இடத்தை இரண்டு பகுதிகளாக பிரித்து கழிப்பறை, குளியலறை கட்டணம் வசூல் செய்தும், உணவகம் அமைத்தும் நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து அந்த இடத்திற்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி தொகையை 3 லட்சத்து 91ஆயிரத்து 768 ரூபாயை செலுத்தக் கோரி கோயில் நிர்வாகத்தின் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வணிக பயன்பாட்டிற்கு உள்வாடகைக்கு விட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற கோயில் அதிகாரிகள் ரூ.1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான 1366 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தை மீட்டனர். மேலும் அந்த கடைகளுக்கு சீல் வைத்து அங்கு உள்ள அறையில் இருந்த ஒரு அடி நீள பித்தளை சூலம், கையடக்க கலசம், விபூதி கொப்பரை ஆகியவற்றை மீட்டுச் சென்றனர்.
மதுரையின் மையப்பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த மீனாட்சி கோவில் சொத்தை மீட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டை தெரிவித்தனர்.
இதையும் படிங்க:திருவள்ளூரில் 15ஆம் நூற்றாண்டு கால மூத்தத் தேவி அம்மன் சிலை கண்டெடுப்பு