மதுரை: கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் ராஜா சேது முரளி. இவர் நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையிலும் தற்போது மதுரையிலும் வித்தியாசமான தோற்றத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். 'ஏனுங்க மறக்காம ஓட்டு போடுங்க -100%' என கொங்குநாட்டு பேச்சு வழக்கில் துண்டறிக்கை அச்சடித்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார். மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற அவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று பரப்புரை மேற்கொண்டார்.
இதுகுறித்து பேசிய அவர், "வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த மார்ச் 28ஆம் தேதி கோவையில் தொடங்கிய இந்தப் பரப்புரையை இன்று மதுரை வழியாக தொடர்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தப் பரப்புரையை மேற்கொண்டு வருகிறேன். ஏறக்குறைய 20 ஆண்டு காலம் இந்தச் சமூக சேவையை செய்துவருகிறேன். இந்தச் சேவையில் மழை நீர் சேகரிப்பு, எய்ட்ஸ் விழிப்புணர்வு, பெண் சிசு கொலைத் தடுப்பு, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறேன்
வருகின்ற ஆறாம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பங்கேற்பது ஒவ்வொரு வாக்காளரின் ஜனநாயக கடமை. அதனை வலியுறுத்தியே வித்தியாசமான மாறுபட்ட வேடத்தில் இந்தப் பரப்புரையை மேற்கொள்கிறேன். ஐந்தாயிரம் துண்டறிக்கை அச்சடித்து வருகின்ற வழி எங்கும் இதுவரை மூன்றாயிரத்து 500 பேரிடம் நேரடியாக வழங்கியுள்ளேன். மதுரையைத் தொடர்ந்து திருச்சிக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளேன்" என்றார்.