மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு போடும் பணிக்காக ஜார்கண்ட், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடித் தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக அழைத்துவரப்பட்டனர்.
இந்தச் சூழ்நிலையில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தன.
ஆனாலும், இந்தத் தொழிலாளர்களை அழைத்துவந்த முகவர்கள் இவர்களை பணிசெய்ய வற்புறுத்தியுள்ளனர். இந்நிலையில், மனித உரிமை அமைப்புகளுக்கு இந்தத் தகவல் சென்றடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அனைவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞர் பிலோமின்ராஜால் மீட்கப்பட்டு மதுரையிலுள்ள தொண்டு நிறுவனத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து வழக்குரைஞர் பிலோமின்ராஜ் கூறுகையில், "புலம்பெயர் தொழிலாளர்களுக்காகச் செயல்படுகின்ற தேசிய அமைப்பிலிருந்து எங்களுக்கு வந்த தகவலையடுத்து நாங்கள் நடவடிக்கையில் இறங்கினோம்.
வடமாநிலத் தொழிலாளர்களை அழைத்துவந்த முகவர் கைவிட்டுவிட்ட நிலையில், செய்வதறியாது திகைத்துநின்ற இந்தப் பழங்குடியினத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை மதுரையில் உள்ள மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் உதவியோடு மீட்டோம்.
ஊரடங்கு நேரத்தில் எந்தவித உதவிகளும் இவர்களது முகவர்களால் செய்து தரப்படாத நிலையில் பசி பட்டினியோடு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாக தங்களது ஊர்களுக்குச் செல்வதற்காக இவர்களது முதலாளிகளிடம் பணிசெய்ததற்கான சம்பளத்தைக் கேட்டுள்ளனர். ஆனால், இவர்களுடைய முதலாளிகள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர்.
மாதம் பத்தாயிரம் ரூபாய் ஊதியத்திற்கு அழைத்துவரப்பட்ட இவர்களுக்கு பல மாதங்களாகச் சம்பளம் மறுக்கப்பட்ட நிலையில் கொத்தடிமை போன்று பணி செய்துவந்துள்ளனர்.
இந்நிலையில், அலங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் முன்னிலையில் இவர்கள் அனைவரும் மீட்டு தற்போது பத்திரமாக எங்களது கண்காணிப்பில் வைத்துள்ளோம். ஊரடங்கு முடிந்தவுடன் அவரவர் ஊர்களுக்கு அனுப்பிவைப்போம்" எனத் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த தொழிலாளி சந்தீப் சாது கூறுகையில், "எங்களை அழைத்துவந்தவர்களால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். பசி பட்டினியால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் பிலோமின்ராஜால் மீட்கப்பட்டோம்.
தற்போது, நாங்கள் மிகப் பாதுகாப்பாக இருக்கிறோம். எங்களுக்குத் தேவையான உணவு, தங்கும் வசதி ஐடியாஸ் தொண்டு நிறுவனத்தால் செய்துதரப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள்!