மதுரை தெப்பக்குளத்தில், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இளைஞர் அணியினருக்கான உறுப்பினர் சேர்க்கைப் படிவங்களை, மாநகர், வட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவும், மாநகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சோலை ராஜாவும் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, “இளைஞர்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம். ஆகையால் அதிமுக அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. தேர்தல் நேரத்தில் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் முன்னுதாரணமாக அதிமுக செயல்படுகிறது.
மத்திய ஆயுஷ் துறை செயலர் இந்தி தெரியாத தமிழர்களை வெளியேறுங்கள் என்று கூறிய விவகாரம் உண்மையாக இருக்கும்பட்சத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் இது குறித்து கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்வார்.
திமுகவினர் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்கப்பட மாட்டாது என அறிவிப்புப் பலகை வைக்கத் தயாராக இருக்கிறார்களா? அதிமுகவை பொறுத்தவரை எம்மதமும் சம்மதம் என்றே இயங்குகிறோம். திமுகவைப் போல் எல்லாவற்றிலும் இருந்து நழுவி ஓடுபவர்கள் அல்ல. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஏன் வாழ்த்துக் கூறவில்லை? தேர்தல் நெருங்குகின்ற காரணத்தால் சிறுபான்மையின மக்களை திமுக ஏமாற்றுகிறது.
வருகின்ற தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரைப் போல் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சாதனைத் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிப்போம். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பேணி காக்கக்கப்படுகிறது. திமுக காலத்தைப்போல் தமிழ்நாட்டில் ரவுடியிசம், கட்டப் பஞ்சாயத்து, மீட்டர் வட்டி, கந்து வட்டி, ரிமோட் வெடிகுண்டு போன்ற எந்த பிரச்சனைகளும் இல்லை” என்றார்.
இதையும் படிங்க...போலி அலுவலர்கள் வேடத்தில் மளிகை கடையில் கொள்ளை: இளைஞர்கள் இருவர் கைது!