தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான மதுரையில் பிற நகரங்களைப் போலவே கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றால் மதுரையைச் சேர்ந்த ஒருவர் கூட இன்று பாதிக்கப்படவில்லை என அம்மாவட்ட ஆட்சியர் வினய் அறிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் 37 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுவரை கரோனா தொற்றால் 79 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 40 பேர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த கட்டட ஒப்பந்தத்தாரர் நவ்ஷாத் என்பவரும், ஏப்ரல் 24ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோயில் அர்ச்சகரின் தாயார் ஒருவரும் கரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட யாகப்பா நகரைச் சேர்ந்த ஒருவரும், மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மூன்று பேரும் என மொத்தம் நான்கு பேர் இன்று பூரண குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
இதையும் படிங்க: 'கரோனா சோதனைக்காக ஐ.சி.எம்.ஆர். ஆய்வகத்தை திறக்க வேண்டும்' - சு. வெங்கடேசன் எம்பி