மதுரை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா மலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா, மலக்கோட்டை கிராமத்தில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு அருள்மிகு ஸ்ரீ சாந்தி வீரன் சாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆனி மாதம் 8 நாட்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இக்கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு என தக்கார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு இந்து அறநிலையத்துறை கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்க கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை எதிர்த்து கடந்த வருடம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா, மலக்கோட்டை கிராமத்திலுள்ள சசி பாண்டிதுரை, பாலசுந்தரம், ஜெயபாலன் மற்றும் நவநீதன் ஆகியோர் நீதிமன்றத்தில் தலைப்பாகை அணியவும், குடை பிடிக்கவும், முதல் மரியாதை கோரியும் வழக்கு தொடர்ந்து அவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்த வருடம் திருவிழாவில் இவர்களால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், ஆனி மாத திருவிழா காலங்களில் இக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் பட்டியலினப்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஆகியோர் கோயிலில் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுவது இல்லை.
எனவே, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா, மலக்கோட்டை கிராமத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ சாந்தி வீரன் சாமி கோயில் ஆனி மாத திருவிழாவில் யாருக்கும் தலைப்பாகை அணியவும் குடை பிடிக்கவும் முதல் மரியாதை வழங்க கூடாது எனவும் பட்டியலினப்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்கவும், திருவிழாவில் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்க வேண்டும்" என மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா, உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை நிர்வாகி நீதிபதி சுப்பிரமணியன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தனிப்பட்ட நபர்களுக்கு கோயில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்கக்கூடாது.
அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மக்களும் கோயில் திருவிழாவிற்கு சென்று வழிபடுவதையும் அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும். இதனை அருள்மிகு ஸ்ரீ சாந்தி வீரன் சாமி கோயில் தக்கார் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: Pocso: 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. 64 வயது முதியவருக்கு 95 ஆண்டுகள் தண்டனை